எண்ணங்களின் எழுத்துரு...

Monday, November 21, 2005

பாழாய்ப்போன கட்டெறும்பு

மூன்று நாட்களாய் என தம்பி
மூன்று வேளை சாப்பாட்டை
முறையாக உண்ணவில்லை
ஓரிடத்தில் அமைதியாய்
ஒதுங்கியிருக்கவில்லை
எதையோ தொலைத்தவன் போல்
சோகமாய் இருந்தனன் - காண்
எல்லோர்க்கும் உள்ளது தான் -
தம்பி என்னடா உன் கவலை
இடம்பெயர்ந்து வந்ததாலா? - உன்
நண்பர்களை பிரிந்ததாலா? - இல்லை
வீட்டுப் பொருட்களை இழந்ததாலா? -ஷெல்
வீழ்ந்து செல்வ மண்ணை அழித்ததாலா?
பதிலேதும் சொல்லாமல்
நடந்து கொண்டிருந்தனன்
நிறுத்திக் கேட்டேன்
என்னவென்று சொல்லேனடா
"பாழாய்ப்போன கட்டெறும்பு
கடிக்க வேறு இடமில்லாது
"மும்தாஜி"ன் முதுகிலே
கடித்தது" என்றான் - காண்!

-"சுடர்ஒளி" வாரஇதழ் (29.07.2001) (இலங்கை)-

-லோகா -

வதை

வாலி வதைபுரிந்த
இராமனே
நீ
தங்கைகளோடு
பிறந்திருந்தால்
நிச்சயம்
சீதன வதை
புரிந்திருப்பாய்!

-"ராணி" குடும்பப் பத்திரிகை 09.08.1998 (இந்தியா) -

- லோகா -

சில திங்கள் கடந்த பின்னர்..

முகவரியை கையில் வைத்து -என்
முன் மனையை தேடினேன் - களைத்தேன்
பள்ளம் விழுந்த வீதியில்லை - கரை
பக்கங்களில் குப்பையில்லை!

ஷெல் உடைத்த கட்டடங்கள்
சென்ற திசையெதிலுமில்லை
சொர்க்கமா இதுவென்று சொக்கிப் போனேன்!

அரைக்காற் சட்டையுடன் அன்ரிகள் நடக்க
"லிப்டிக்" கலரும் "சன்கிளாஸ்" சைனிங்கும்
கண்ணை குத்தவே முழித்தேன் - விழித்தேன்
"அட்ரசைக்" காட்டி கேட்கவும் நினைத்தேன்

எங்கும் தமிழ் பேசக் காணோம் - இது
யாழ். நகரா? இல்லை தலைநகரா?
தலைகால் புரியாது திகைத்தேன் - சலித்தேன்

நங்கையர் எல்லாம் நாகரிகமாக...
நான் மட்டும் பழமையுடன் - புரியவில்லை
யாழ்ப்பாணமா! இது முன்னேறி விட்டதே
யாருக்கும் இங்கு தமிழ் தெரியவில்லையே
வழி மாறி வந்தேனோ?
வலுவின்றிப் போனேனா?

சரியாக வந்தது....
சாலைப் பக்கமாய் சென்று
சுற்றிலும் பார்த்தேன்
ஒருத்தரும் வரவில்லை
சற்று நிம்மதியானேன்

மதிலின் பின்னிருந்து - மாயமாய்
ஓர் உருவம் சடாரென எழுந்து
"சலம் விடுவதற்கு எம்மிடம்
ஐ சி யெடுத்தாயா?......"
.....! .....! ....!

- சஞ்சீவி வார இதழ் 1999 (யாழ். இலங்கை)-

- லோகா -