எண்ணங்களின் எழுத்துரு...

Monday, December 31, 2007

நன்றியுடன் வணக்கம்!



இணையத்தளம் காண வந்த தங்களுக்கு..
நன்றியுடன் வணக்கம்!

எழுத்தும் ஒப்பனையும்
என் இரு கண்களாகி...
மெல்ல மெல்ல நடைபயின்றும்
மேனியெல்லாம் ரணமடைந்தும்..
மேல்நிலையை எட்டுதற்காய்
மேடைகளை தேடுகிறேன்..

இலட்சியங்களை எட்டுதல் தான்
நிறைவான வாழ்க்கை..
எட்டுதலுக்கு எத்தனித்தல் - இது
என் வாழ்க்கை..

என்னுடன் கைகொடுக்கும்
உள்ளங்கள் அத்தனைக்கும்
இணைந்திருக்கும் உங்களுக்கும்
மீண்டும் நவில்கிறேன்..
நன்றியுடன் வணக்கம்!

-லோகா-

Monday, February 05, 2007

அராஜகம்!


எலும்பு உருக்கி
கொல்லுதல் போதவில்லையாம்-
கூரை பிரிக்கிறது
கொடியவர்களின் அராஜகம்!

- லோகா -
"தமிழ்கவிதை" தளத்தின் கவிதைப்போட்டிக்காக (02) தரப்பட்ட படத்திற்கு எழுதப்பட்டது.

தைப்பொங்கல்...

கரும்பு கட்டி
விறகு அடிக்கி
கோலம் போட்ட
காலம்..
இறந்த காலம்!

இந்த குளிர்தேச
வாழ்வில்
எமக்கு
பிறேம்போட்ட புகைப்படமே
நிகழ்காலம்!

- லோகா -

"தமிழ்கவிதை" தளத்தின் கவிதைப்போட்டி 01 இல் தரப்பட்ட படத்தி்ற்காக எழுதப்பட்டது.

Sunday, January 14, 2007

இன்றைய தைப்பொங்கல்

ஆதவன் எழும்பும் முன்னர்
ஆக்கிப்படைக்கவேண்டும் - பொங்கல்
மகிழ்ச்சி பொங்க வேண்டும் - என்று
எழுந்து தோய்ந்து
அடுத்த ஒழுங்கையில்
பால் வாங்கப் போனேன்...
அவசரத்தில் எடுத்து வைக்க
மறந்த ஐ.சி.யினால்
அன்று முழுக்க பொங்கவில்லை - போங்கள்!

- லோகா -

"சஞ்சீவி" ..கவிதை முற்றம்.. (வாரஇதழ் 2000) (யாழ்.)

இது கவிதை முற்றத்தில் வழங்கப்பட்ட ஒவியத்திற்காய் எழுதப்பட்டது. தற்போதைய யாழ்ப்பாணச் சூழ்நிலைக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

Wednesday, October 04, 2006

இடைவெளி..

அன்று முதல் இன்று வரை
ஆளுங் கட்சியும்
எதிர்க் கட்சியும்
எதிரெதிர் தடம் பதிக்கின்றன!
அவற்றினிடையிலுள்ள
இடைவெளியாய்..
இனப்பிரச்சனை!


"சஞ்சீவி" ..கவிதை முற்றம்.. (வாரஇதழ் 2000) (யாழ்.)

இது கவிதை முற்றத்தில் வழங்கப்பட்ட ஒவியத்திற்காய் எழுதப்பட்டது.

- லோகா -

Wednesday, September 06, 2006

முற்றத்தில் குற்றிய முற்கள் (முள்- 01)

எப்படியும் இன்றதைப்
பார்த்திடவேண்டும்
ஐந்தரை மணிக்கே
லீவெடுக்கவேண்டும்
ஐந்து நிமிடம் பிந்தினாலும்
அடுத்த ரயில்
அரைமணிக்குப் பிறகுதான்

எட்டுக்கு வீடேகி
செய்தி முடிந்திட
செவ்வி வரும்
கட்டாயம் பார்க்கணும் - தவறின்
வரலாற்றுச் செவ்வியை
காணமுடியாப் பாவி நான்

இன்று காலையில்
ஏதோவொரு வேகத்தில்
நிகழ்ச்சி நிரல் பார்த்ததில்
மனநெருடல் தொடக்கம்

வேலை நாளில்- எனது
எட்டுமணி நேரத்தில்
இந்த நிகழ்ச்சியை
எப்படிப் பார்ப்பது
எப்படியும் பார்ப்பது

முடிவு எடுத்தாலும்
முடியுமா என்றது
கேட்டாலும் முந்தி விட
முதலாளி ஓமாமோ..

கத்தினான் கடுமையாய்
செப்பினான் ஜேர்மனில்
காதைப் பொத்தியும்
நெஞ்சைச் சுட்டது வார்த்தைகள்

வரலாற்றுக்காக உயிர் போக்கிய
வரலாற்றுச் செவ்வி காணும் வெறிக்கு
வாயப் பேச்சு என்ன செய்யும்
வன்செல்லும் புல்லாகும்

தாங்கினேன் -வேலையை
தயங்காது முடித்தேன்
பாய்ந்தடித்து ரெயில் பிடித்து
படபடக்க ஓடி வந்தேன்

இன்று மட்டும்
வீடு ஏதோ விசேடமாய்ப்பட்டது
காற்றும் குளிரும்
மனதைத் தொட்டது

தொலைக்காட்சி நிலையத்திற்கு
நன்றியைக் கொட்டணும்
நல்ல நிகழ்ச்சி போடுவதற்காய்
நல்லாசி கூறணும்

கதவை திறந்தேன்
உள்ளே புகுந்தேன்
கவலை பறந்தது
தொடங்கவில்லை
கழற்றா உடுப்புடன்
கதிரையில் விழுந்தேன்

இரண்டு நிமிடம்
ஒரு நிமிடம்
ஆகா
நிகழ்ச்சி ஆரம்பம்

வணக்கம்

இவங்களுக்கு வேற வேலையில்லை
ஒழுங்கான நிகழ்ச்சியைப் போர்றதில்லை
ஓலைகள் நாடகம் இண்டைக்கில்லை

எடுத்த
சம்பிகை கொப்பி
நம்பர் நாப்பத்தொன்பது

பார்த்து முடிக்கோணும்
அடுத்த
கொப்பி எடுக்கோணும்
நாளைக்கே மாத்தோணும்
அதனால்
அதனைப் பார்ப்போம்

எடுக்கப்பட்ட முடிவினை
எதிர்க்க முடியல்லை
எதிர்த்து கதைத்திட
என்னால் முடியவில்லை
கனவுகள் எல்லாம் மெய்ப்பதில்லை
அன்று மனம் அடைந்ததைப் போல்
துயரம்..
முடியவில்லை!

" ஊசிஇலை" மார்கழி 2003 ( சுவிஸ்)

- லோகா -

Friday, May 12, 2006

கவலையில்லா மனிதன்

பிடித்து விட்டேன் - மடக்கி
பிடித்து விட்டேன்
சந்தோசம் - அளவு கடந்த
சந்தோசம்
இனி
வயலிற்குள் போனால் என்ன
வாய்க்காலிற்குள் போனால் என்ன
ஐந்தாறு வருடத்திற்கு - கால்
ஆட்டிக்கொண்டு உண்டிடுவேன்
அடுத்தடுத்த சந்ததிக்கு
ஆனந்தமாய் சேர்த்து வைப்பேன்
என்ன என்ன சொன்னேன்
இன்றே மறந்துவிட்டேன்
மறந்தது தான் நல்லது
அவாகள் அழுதால் என்ன
அழிந்தால் என்ன - நான்
கவலையில்லா - மனிதன்
கவலையில்லா - மனிதன்!

"சுடர்ஒளி" வாரஇதழ் (2003)

- லோகா -

Monday, May 01, 2006

தொடர்கதையோ...

குப்பை கொட்டுமிடத்தில்
குப்புற ஒரு பிணம்

மரப் பற்றைக்குள்
மங்கையின் வெற்றுடல்

யார் பெற்ற பிள்ளையோ?
யார் செய்த வேலையோ?

ஐபிகே வந்தென்ன?
அரசாங்கம் ஆண்டென்ன?

தொடரும் படுகொலை
நாளைக்கு யார்தலை?

வழமைக்கு திரும்பிய
யாழ்ப்பாணம் இதுவன்றோ?

வழுக்கையாற்றில் பாய்வது - நம்
செங் குருதியோ...!

"சஞ்சீவி" ( வாரஇதழ் 1999) (யாழ். இலங்கை)

- லோகா -

ஆவர்த்தண அட்டவணை

மெண்டலீவ்
தயாரித்துமென்ன
மோஸ்லி
பாகுபடுத்தியென்ன
பெண்களின் மனதை
பகுத்தறிய முடியலியே!

"சஞ்சீவி" வாரஇதழ் 1999 (யாழ். இலங்கை)

- லோகா -

Friday, April 28, 2006

விதிகள்

பைதகரசின் விதியினால்
செம்பக்கம் காண்கிறோம்
யார் சொன்ன விதியால்
பெண்பக்கம் பார்க்கிறோம்?

"சஞ்சீவி" (வாரஇதழ் 1999) (யாழ். இலங்கை)
" ஊசிஇலை" (2003 மார்கழி) (சுவிஸ்)

- லோகா -

நிஜம்

உன் கண்களில்
நான்
மையெழுதிப் பார்த்தேன்
கனவில் தான்
உன்
கண்கள் எனக்கு
தெரிந்தன!

"ஊசிஇலை" (2003 மார்கழி) சுவிஸ்

- லோகா -

Tuesday, December 06, 2005

ஈர்ப்பு விசைகள்

விஞ்ஞானியே நீயூட்டா!
புவியீர்ப்பு விசையை
கண்டுபிடித்த நீயேன்
கன்னீயீர்ப்பு விசையை
கண்டுபிடிக்க மறந்துவிட்டாய்?

"சஞ்சீவீ " வாரஇதழ் (1999) (யாழ். இலங்கை)
"ஊசிஇலை" (2003 மார்கழி) (சுவிஸ்)

- லோகா -

முத்தமிட்ட அவள்!

கண்ணடித்தாள் - தன்
இதழ் கடித்தாள்
கட்டியென்னை முத்தமிட்டாள்
சின்னச் சிரிப்பில் - எனை
சிலிர்க்க வைத்தாள்
"கண்ணே!" என்றேன்
"கனியமுதே!" என்றேன்
"என்னுயிர் நீ!" யென்றேன்
நான் செய்ய எண்ணியவை
அத்தனையும் அவள் செய்தாள்
என்ன தவம் செய்தேனோ - பெண்ணே
உன்னைப் பெறுவதற்கு!
கிளிச் சொண்டை திறந்து - அவள்
"குட்நைட் டாடி!" என்றாள் - ஐந்து
வயது அடையாத என்
மகள் ஆரணி...!

"சஞ்சீவீ " வார இதழ் (1999) (யாழ். இலங்கை)
"ஊசிஇலை" (2003 மார்கழி) (சுவிஸ்)

- லோகா -

Monday, November 21, 2005

பாழாய்ப்போன கட்டெறும்பு

மூன்று நாட்களாய் என தம்பி
மூன்று வேளை சாப்பாட்டை
முறையாக உண்ணவில்லை
ஓரிடத்தில் அமைதியாய்
ஒதுங்கியிருக்கவில்லை
எதையோ தொலைத்தவன் போல்
சோகமாய் இருந்தனன் - காண்
எல்லோர்க்கும் உள்ளது தான் -
தம்பி என்னடா உன் கவலை
இடம்பெயர்ந்து வந்ததாலா? - உன்
நண்பர்களை பிரிந்ததாலா? - இல்லை
வீட்டுப் பொருட்களை இழந்ததாலா? -ஷெல்
வீழ்ந்து செல்வ மண்ணை அழித்ததாலா?
பதிலேதும் சொல்லாமல்
நடந்து கொண்டிருந்தனன்
நிறுத்திக் கேட்டேன்
என்னவென்று சொல்லேனடா
"பாழாய்ப்போன கட்டெறும்பு
கடிக்க வேறு இடமில்லாது
"மும்தாஜி"ன் முதுகிலே
கடித்தது" என்றான் - காண்!

-"சுடர்ஒளி" வாரஇதழ் (29.07.2001) (இலங்கை)-

-லோகா -

வதை

வாலி வதைபுரிந்த
இராமனே
நீ
தங்கைகளோடு
பிறந்திருந்தால்
நிச்சயம்
சீதன வதை
புரிந்திருப்பாய்!

-"ராணி" குடும்பப் பத்திரிகை 09.08.1998 (இந்தியா) -

- லோகா -

சில திங்கள் கடந்த பின்னர்..

முகவரியை கையில் வைத்து -என்
முன் மனையை தேடினேன் - களைத்தேன்
பள்ளம் விழுந்த வீதியில்லை - கரை
பக்கங்களில் குப்பையில்லை!

ஷெல் உடைத்த கட்டடங்கள்
சென்ற திசையெதிலுமில்லை
சொர்க்கமா இதுவென்று சொக்கிப் போனேன்!

அரைக்காற் சட்டையுடன் அன்ரிகள் நடக்க
"லிப்டிக்" கலரும் "சன்கிளாஸ்" சைனிங்கும்
கண்ணை குத்தவே முழித்தேன் - விழித்தேன்
"அட்ரசைக்" காட்டி கேட்கவும் நினைத்தேன்

எங்கும் தமிழ் பேசக் காணோம் - இது
யாழ். நகரா? இல்லை தலைநகரா?
தலைகால் புரியாது திகைத்தேன் - சலித்தேன்

நங்கையர் எல்லாம் நாகரிகமாக...
நான் மட்டும் பழமையுடன் - புரியவில்லை
யாழ்ப்பாணமா! இது முன்னேறி விட்டதே
யாருக்கும் இங்கு தமிழ் தெரியவில்லையே
வழி மாறி வந்தேனோ?
வலுவின்றிப் போனேனா?

சரியாக வந்தது....
சாலைப் பக்கமாய் சென்று
சுற்றிலும் பார்த்தேன்
ஒருத்தரும் வரவில்லை
சற்று நிம்மதியானேன்

மதிலின் பின்னிருந்து - மாயமாய்
ஓர் உருவம் சடாரென எழுந்து
"சலம் விடுவதற்கு எம்மிடம்
ஐ சி யெடுத்தாயா?......"
.....! .....! ....!

- சஞ்சீவி வார இதழ் 1999 (யாழ். இலங்கை)-

- லோகா -